வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இதுதான் சாவித்திரியின் கதை

அசுபதி என்னும் ஓர் அரசர் இருந்தார்.  அவருக்கு ஒரு மகள்.  அழகிலும்   பண்பிலும் சிறந்து விளங்கிய அவளுக்கு, இந்துக்களின் மிகப் புனிதமான பிரர்த்தனையான  சாவித்திரி என்ற பெயர் வைக்கப்பட்டது.  அவளுக்கு வயது வந்ததும் கணவனைத் தேர்ந்தெடுக்கும்படி அவளது தந்தை சொன்னார்.  பண்டைக்காலத்தில் அரச குமாரிகள் மிகச் சுதந்திரமாக வாழ்ந்தார்கள், தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்தார்கள்.
111111.jpg
சாவித்திரி தங்கத் தேரில் அமர்ந்து, தன தந்தை நியமித்திருந்த மெய்க் காப்பாளரும் அரசவைப் பரிவார முதியோரும் புடைசூழத் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்தாள்.    பல இளவரசர்களைக் கண்டும் யாரும் சாவித்திரியின் உள்ளத்தைக் கவரவில்லை.   
இறுதியாக, இந்தியாவில் அந்த நாளில் மிருகங்களுக்கென்று ஒதுக்கப்பட்டதும், மிருகங்களைக் கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததுமான ஒரு காட்டிலிருந்த ஆசிரமத்தை அடைந்தாள்.   அங்குள்ள  மிருகங்கள் மனிதரைக் கண்டு பயப்படுவதில்லை, ஏரியில் உள்ள மீன்கள் மனிதர்களின் கையிலிருந்து உணவுப் பொருளை வந்து உண்டது.   ஆயிரக்கணக்கான வருடங்களாக அங்கிருந்த எதையும் யாரும் கொன்றதில்லை.  முனிவர்களும் வயோதிகர்களும் அங்கே சென்று மான்கள், பறவைகள் ஆகியவற்றுடன் வசித்தார்கள்.  வாழ்கையில் அலுப்புத் தட்டும்போது மனிதன் காட்டிற்குச் சென்று முனிவர்களுடன் வசிப்பான்; எஞ்சிய காலத்தை முனிவர்களோடு ஆன்மீகத்தை பற்றிப் பேசுவதிலும் தியானத்திலும் களிப்பான்.   
துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் இருந்தார்.  அவர் தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்த போது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.  பாவம், அந்த முதிய குருட்டு மன்னர் மனைவியுடனும் மகனுடனும் அந்தக் காட்டிற்கு வந்து தவம் செய்வதில் காலத்தைக் கழித்தார்.  அவருடைய மகன் பெயர் சத்தியவான். 
பல அரசவைகளையும் பார்த்த பிறகு, சாவித்திரி இறுதியாக இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.  ஆசிரமத்தில் இருந்த முனிவரைக் கண்டு வணக்கம் செலுத்தாமல், எவ்வளவு பெரிய மன்னரும் ஆசிரமத்தைக் கடந்து செல்லக் கூடாது.  அவ்வளவு மரியாதையை இந்த முனிவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  இந்தியாவின் பெரிய சக்கரவர்த்திகூட, கந்தைகளை உடுத்திக் கொண்டு காய்கனிகளைத் தின்று வாழ்ந்த ஒரு முனிவரின் வம்சத்தில் தோன்றியவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைவான்.  நாங்கள் முனிவர் பரம்பரையில் வந்தவர்கள்.  ஆகவே ஆசிரமங்களின் பக்கமாகச் செல்லும் அரசர்கள் கூட ஆசிரமத்திற்குள் நுழைந்து முனிவரை வணங்குவதை ஒரு பெருமையாகக் கருதினார்கள்.  அவர்கள் குதிரைமீது வந்துகொண்டிருந்தால் கீழே இறங்கி நடப்பார்கள்;    தேர்களில் வந்தால், அவற்றை நிறுத்தி விட்டு, கவசங்களை அகற்றிவிட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.  எந்தப் படை வீரனும் ஒரு பக்தனைப் போல் அமைதியுடனும் அடக்கத்துடனும் தான் உள்ளே நுழைய வேண்டும். 
இந்த ஆசிரமத்திற்கு வந்த சாவித்திரி சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள்.  அரண்மனைகளில் கண்ட அரசகுமாரர்களை விட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேணனின் மகனான் சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான். 
சாவித்திரி திரும்பி வந்ததும் தந்தை அவளைப் பார்த்து, 'அருமை மகளே சாவித்திரி, நீ மனம் செய்து கொள்ள விரும்பும் யாரையாவது கண்டாயா சொல்' என்று கேட்டார்.  சாவித்திரியும் நாணத்துடன், 'ஆம், அப்பா' என்று மெல்லிய குரலில் சொன்னாள். 
'அவர் அரசகுமாரன் அல்ல, அரசை இழந்துவிட்ட துயுமத்செணனின் மகன்.  அவருக்குத் தந்தை வழிச் சொத்து எதுவும் இல்லை.  ஒரு குடிசையில் துறவி போன்று வாழ்க்கை நடத்துகிறார்.  கிழங்குகளையும், இலைகளையும் சேகரித்து, வயதான பெற்றோர்களைக் காப்பாற்றுகிறார்' என்று சொன்னாள்.இதைக் கேட்ட அரசன் அந்த வேளையில் அங்கிருந்த நாரதரிடம் இதுபற்றிக் கலந்து பேசினார்.  அனால் நாரதர் இதனை ஒரு பெரிய அபசகுனம் என்று கூறிவிட்டார்.  அதை விளக்க வேண்டும் என்று மன்னன் கேட்டதற்கு நாரதர், 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என்று கூறினார்.  இதைக் கேட்டு அரசன் நடுங்கினான்.  சாவித்திரி, அந்த இளைஞன் இன்னும் பன்னிரண்டு மாதங்களில் இறக்கப் போகிறான்.  நீ விதவையாகி விடுவாய்.  அதை நினைத்துப் பார்.  இந்த இளைஞன் வேண்டாம். அற்ப ஆயுள் உள்ள இந்த இளைஞனை நீ மணக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்' என்றான்.  'அதைப்பற்றிக் கவலைபடாதீர்கள் அப்பா!  வேறு யாரையாவது மணம் புரிந்துகொள்ளச் சொல்லி என் கற்புக்கு மாசு தேடாதீர்கள்.  ஏனெனில் நான் அந்த வீர சத்தியவானைத் தான் காதலிக்கிறேன்.  அவரை என் மனத்தில் கணவனாக வரித்துவிட்டேன்.  பெண் ஒரு முறை தன கணவனைத் தேர்ந்தெடுப்பாள், பிறகு அதிலிருந்து மாறவே மாட்டாள்' என்று சொன்னாள்.    
 சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு அரசன் திருமணத்திற்குச் சம்மதித்தான்.  சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது.  அவள் தன அரண்மனையைவிட்டுக் காட்டிற்குச் சென்று, கணவனுடன் வாழ்ந்தாள்;  அவனுடைய பெற்றோர்களுக்குத் தொண்டு செய்தாள். 
சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்த போதிலும், அதை அவள் அவனிடம் சொல்லவில்லை.  தினமும் அவன் காட்டிற்குச் சென்று, பழங்களும் மலர்களும் விற்கும் சேகரித்துக்கொண்டு திரும்புவான்.  சாவித்திரி சமையல் செய்வாள்.  அந்த முதியவர்களுக்குத் தொண்டு செய்வாள். 
வாழ்க்கை இப்படியே சென்றது.  இறுதி நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன.  அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி.   இறுதிநாள் இரவு.  இரவெல்லாம் உறங்காமல், கண்ணீர் வெளியே தெரியாமல் மனத்திற்குள் அழுதுகொண்டே பிரார்த்தனைகள் செய்தாள்.  அந்த இறுதி நாள் பொழுது விடிந்தது.  அன்று ஒரு கணம்கூடக் கணவனைவிட்டுப் பிரியக் கூடாது என்று தீர்மானித்தால் அவள்.  விறகு வெட்டச் செல்லும் கணவனுடன் செல்லத் தன்னையும் அனுமதிக்கும்படி அவனுடைய பெற்றோர்களிடம் அனுமதிபெற்று உடன் சென்றாள். 
காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறினான்.  'என் கண்ணே சாவித்திரி, தலைசுற்றுகிறது, என் புலன்கள் தடுமாறுகின்றன.  எனக்குத் துக்கம் வருகிறது.  நான் உன் பக்கத்தில் சற்று இளைப்பாறுகிறேன்' என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.  சாவித்திரி பயந்து நடுங்கிக் கொண்டே, 'என் ஆருயிரே, தலையை என் மடியின்மீது வைத்துக்கொண்டு படுங்கள்' என்று சொன்னாள்.  மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்த சத்தியவான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு உயிர் துறந்தான்.  அந்தத் தனிக்காட்டில் கண்களில் நீர் மல்க, தன கணவனைக் கட்டிபிடித்தபடியே இருந்தாள் அவள். 
அப்போது அவனது உயிரை அழைத்துச் செல்ல எமதூதர்கள் அங்கு வந்தார்கள்.  ஆனால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை அவர்களால் நெருங்கமுடியவில்லை.  அவளை அக்கினி வட்டம் ஓன்று சூழ்ந்திருந்தது.  எனவே எமதூதர்கள் எமனிடம் திரும்பிச் சென்று சத்தியவானின் உயிரைக் கவர முடியவில்லை என்று சொன்னார்கள்.
இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.
 
அவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சதம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். 
'என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன். 
 சாவித்திரி சொன்னாள்:  'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  அன்பர் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவில்லையே' என்றாள்.
'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.
தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள், மரணதேவா! 
'கடமை தவறா மகளே, உன் விருப்பப்படியே ஆகுக' என்று கூறிவிட்டு மரண தேவன் சத்தியவானின் உயிரை அழைத்துக் கொண்டு தொடர்ந்து சென்றான்.  திரும்பவும் காலடிச் சத்தம் கேட்டது, திரும்பிப் பார்த்தான். சாவித்திரி தொடர்ந்து கொண்டிருந்தாள். 
'என் மகளே சாவித்திரி, இன்னும் ஏன் என்னைப பின்தொடர்கிறாய்? 
தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்? 
'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 
'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'. 
'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'. 
எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்திரி, மறைந்த கணவனைப் பின்தொடர்ந்தாள். 
எமன் திரும்பிப் பார்த்து, 'நற்குணம் வாய்ந்த சாவித்திரி, நம்பிக்கை இழந்து துயரத்தில் வாடியவாறு என்னைத் தொடராதே'. 
என் ஆருயிர்க் கணவனைத் தாங்கள் எங்கு எடுத்துச் செல்கிறீர்களோ, அங்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'. 
உன் கணவன் ஒரு பாவி என்று வைத்துக்கொள்.  அவன் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தால் சாவித்திரி அங்கும் செல்வாளோ? 
வாழ்விலோ சாவிலோ, நரகமோ அவரைப் பின்தொடர்வதுதான் எனக்கு மகிழ்ச்சி'. 
'ஏன் குழந்தாய், உன் வார்த்தைகள் மேலானவை.  நான் மகிழ்கிறேன்.  இன்னொரு வரம் கேள்.  ஆனால் செத்தவர்கள் உயிர்பிழைக்க மாட்டார்கள், ஞாபகம் வைத்துக் கொள்'. 
'அப்படியானால் என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கட்டும்.  அவருடைய அரசு சத்தியவானின் மைந்தர்களுக்குச் செல்லட்டும்'. 
இதைக் கேட்டு எமதர்மன் புன்னகைத்தான்.  'என் மகளே, உன் கணவனின் உயிர், அவன் உயிர் பெறுவான், உன் குழந்தைகள் அரசாள்வர்.  வீடு திரும்பு.  அன்பு மரணத்தை வென்றுவிட்டது.  உன்னைப்போல் எந்தப் பெண்ணும் கணவனைக் காதலிக்கவில்லை.  உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட  ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று' என்றான். 
இதுதான் சாவித்திரியின் கதை.  இந்தியப் பெண்கள் எல்லோரும் சாவித்திரியைப்போல் விளங்க முயற்சிக்க வேண்டும்.  அவளது அன்பை மரணதால்கூட வெற்றிகொள்ள முடியவில்லை.  ஆற்றல் மிக்க அன்பினால் அவள் தன கணவனின் உயிரையே எமனிடமிருந்து மீட்டாள்